இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பானது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பிற்கான எமது 2020 டிசெம்பர் 28 ஆம் திகதிய ஆலோசனைகள், உங்களது அழைப்பின் பேரில் 2021 பெப்ரவரி 20 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் மஞ்சல் அறையில் இடம்பெற்ற எமது இரண்டு மணி நேர சந்திப்பு மற்றும் 2021 பெப்ரவரி 24 ஆம் திகதியிடப்பட்ட எமது கடிதம் ஆகியன தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டிற்கான புதியதோர் அரசியலமைப்பில் தீர்த்து வைக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் என்றபோதிலும், மேதகு சனாதிபதி உங்களுடைய குழுவை நியமித்தபோது எங்களோடு கலந்தாலோசிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.
எனினும், உங்கள் குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியபோது, நாம் அந்நடைமுறையில் மிக ஆக்கபூர்வமாக ஈடுபட்டு எமது ஆலோசனைகளை அனுப்பி வைத்தோம்.
அதன் பின்னர் உங்களது அழைப்பின்பேரில் நாம் உங்களைச் சந்தித்து, தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கடந்த 33 ஆண்டுகளில் எட்டப்பட்ட கருத்தொருமைப்பாட்டு விடயங்களை இனங்காண்பதில் உங்களது குழுவோடு இணைந்து செயற்படுவதற்கான எமது விருப்பம் தொடர்பாகவும் மேலும் விரிவாக எடுத்துரைத்தோம்.
ஏற்கெனவே வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம்.
எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும்.
இது, இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதோர்; அரசியலமைப்பை வகுக்கும் உன்னத பணியில் உங்களோடு ஒத்துழைப்பதற்கான எமது விருப்பை வெளிப்படுத்தலின் ஒரு நினைவூட்டலாகும் – என்றுள்ளது.