மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1-ந் தேதி ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

இதில் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் மியான்மார் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.‌

தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்தநிலையில் மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டு உள்ள ஆங் சான் சூகி நேற்று முன்தினம் காணொலி காட்சி வாயிலாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வக்கீல் மற்றும் நீதிபதிகளின் கேள்விக்கு ஆங் சான் சூகி பதில் அளித்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ஆங் சான் சூகியின் மீது புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறுவோருக்கு சாதாரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தங்களின்படி, இந்த சட்டத்தை மீறுபவா்களை காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்க முடியும்.

அதன்படி ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, அவரை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் காலவரையின்றி தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு வழிவகை செய்துள்ளது.

இதற்கிடையில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டு இட்டுக்கட்டப்பட்டது என்றும் இது அவரின் மனித உரிமைகளை மீறும் செயல் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில் நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் ராணுவம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஸா மின் துன் தலைநகர் நேபிடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் ராணுவம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது என்றும் ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தலைத் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சிக்கு அதிகாரத்தை ராணுவம் ஒப்படைக்கும் என்றும் உறுதிபடக் கூறினார். அதேசமயம் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *