மியான்மரில் கடந்த மாதம் 1-ந் தேதி அந்த நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மார் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரி நடைபெறும் இந்த போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை மீறி போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை ராணுவம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேசமயம் ராணுவத்தினரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்றும் யாங்கூன், மாண்டலே, மைங்கியன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை விரட்டியடிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் சுட்டதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதில் மியான்மரின் மத்திய நகரில் 5 பேர் மண்டலே நகரில் 2 பேர் யங்கூன் மற்றும் மைங்கியன் நகரங்களில் தலா ஒருவர் என மொத்தம் 9 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இப்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.