மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
பிப்ரவரி 1 முதல் இப்போது வரை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 320-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் போராட்டத்துக்கு மத்தியில் மியான்மர் ராணுவம் நேற்று ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் போராட்டக்காரர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில் ‘‘முந்தைய அசிங்கமான மரணங்களின் சோகத்தில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தலையிலும் பின்புறத்திலும் சுடப்படும் அபாயத்தில் இருக்கிறீர்கள். கோரிக்கைகளை முன் வைப்பதற்கு ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வன்முறை செயல்களை ஏற்க முடியாது’’ என கூறினார்.
அதேசமயம் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த அவர் அதற்கு மக்கள் ராணுவத்துடன் கைகோர்த்து பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார்.அதேபோல் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.