யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் ஒருமுறை பலத்த எதிபார்பை தோற்றுவித்துள்ள நிலையில் யாழ்.மேயரின் பதவிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டதன் தொடராக அன்றைய முதல்வர் ஆர்னோல்டின் பதவி பறிபோன நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தராக விளங்கியிருந்த வி.மணிவண்ணன் (V. Manivannan) முதல்வராக தெரிவாகியிருந்தார்.
யாழ்.மாநகர சபையின் அங்கத்தவ கட்சிகளுக்கு இடையில் காணப்படும் ஆசனங்களின் எண்ணிக்கையில் கூடுதல் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் கொண்டிருக்காத நிலையில் இந்த ஆண்டு வரவு – செலவுத்திட்டமும் பரபரப்பாக அமையும் என்று கடந்த ஆண்டே எதிர்வு கூறப்பட்டிருந்தது.
மாநகர சபையில் இரண்டு முறை முதல்வர்கள் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டால் அடுத்த மாநகரசபைத் தேர்தல் வரையில் அதிகாரம் ஆணையாளர் வசம் இருக்கும் என்கிற விடயம் கடந்த சில நாட்களாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இன்று (14-12-2021) மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்டும் போது அதனை எதாவது ஒரு கட்சி ஆதரிக்கும் பட்சத்திலேயே வரவு செலவுத்திட்டம் நிறைவேறும் என்பதுடன் முதல்வரின் பதவியும் தக்கவைக்கப்படும் என்பதே நிலைப்பாடாக காணப்படுகிறது.
இந்நிலையில், மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் முடிவு எடுத்துள்ளனர். இதேநேரம், 45 உறுப்பினர்களை கொண்ட யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்று முக்கிய கட்சிகள் நேற்றுக் கூடி ஆராய்ந்தன.
16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் வரவு – செலவு திட்டத்தை ஆதரிப்பதில்லை என்ற முடிவை உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவு எடுத்திருபதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.மாநகர முதல்வர் உட்பட 13 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இரு அணிகளாக ஏற்கனவே பிளவுண்டுள்ளனர். இதில் 10 உறுப்பினர்கள் வி.மணிவண்ணன் பக்கம் உள்ள நிலையில், 3 உறுப்பினர்கள் அவர்கள் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைமையின்கீழ் இயங்குகின்றனர். இவர்கள் நேற்று கட்சியின் தலைமையுடன் பேசினர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் (13-12-2021) பத்திரிகையாளர்களை சந்தித்த அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமது நிலைப்பாடு நாளை (இன்று) வெளிப்படுத்தப்படும்’, என்று கூறினார். எனினும், உட்கட்சி வட்டாரங்களின் தகவலின்படி வரவு – செலவு திட்டத்தை எதிர்க்கும் முடிவிலேயே உள்ளதாக அறியமுடிந்தது.
இருப்பினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. இதேவேளை, 10 மாநகர உறுப்பினர்களை கொண்ட இன்னொரு பகுதியினர் எதிர்ப்பதாகவும் கூறினர். கூட்டத்தின் முடிவுவரை இந்த இழுபறி நிலை நீடித்தது. எனினும், எதிர்க்கும் முடிவை வெளியிட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தனர் என்று அறியவருகின்றது.
இதனிடையே அந்தக் கட்சியின் உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா மாவட்டத்தில் இல்லாமையால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. இதேவேளை, 3 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும், 2 உறுப்பினர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஓர் உறுப்பினரைக் கொண்ட தமிழர் விடுதலை கூட்டணியும் எடுக்கும் முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.