முல்லைத்தீவு – மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தரியவருகையில்,சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு சாலை சிறுகடலுக்கு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு மாத்தளன் பகுதியினை சேர்ந்தவர்களும் தாக்கியுள்ளார்கள். இந்நிலையில் வாள், கம்பி மற்றும் கத்தி போன்றன கொண்டு இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இதன் போது இரணைப்பாலையினை சேர்ந்த மூன்று மீனவர்களும், மாத்தளன் பகுதியனை சேர்ந்த ஒரு மீனவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தாக்குலின் போது இரண்டு மோட்டார் சைக்கில்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் இரணைப்பாலையினை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.