கொரோனா பரவல் தற்போது நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,563 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் 29 பேர் பலியாகி உள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சத்தீஸ்கர் மாநில அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.அனைத்து மதுபான கடைகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிருமி நாசினி வழங்குவது, முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு முகக்கவசம் வழங்குவது, வளாகத்தை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மதுபான கடைக்கும் தலா ரூ.10 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பு குழுவினர் நாள்தோறும் 5 முறை மதுபான கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தவும் சத்தீஸ்கர் அரசு அறிவுறுத்தியுள்ளது.