ஆட்சி ஏற்றுக் கொண்ட கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிகள் வந்து குவிந்து கொண்டிருப்பது கொழும்பு அரசியலில் பல்வேறு தாக்கங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை உருவாக்க முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கின்றனர் என்கின்றன தென்னிலங்கை தகவல்கள்.
ஒன்றிணைந்த எதிரணியின் கோட்டையாக இருந்த கொழும்பு – நாரஹேண்பிட்டி அபயராம விகாரையிலேயே புதுக்கட்சியை ஆரம்பிப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்காவில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூரணமாகவுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கப் பெரிதும் பாடுபட்ட பிரதான பௌத்த தேரர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்.
தங்களது அதிருப்தி நிலையை அவர்கள் பகிரங்க ஊடக சந்திப்புக்களிலும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோட்டா-மஹிந்த அரசாங்கத்தை எதிர்த்து மாற்று வழியொன்றை உருவாக்குவது பற்றிய பேச்சுக்கள் கொழும்பில் நடத்தப்பட்டுள்ளன.
அண்மையில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைக்கு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், ஓமல்பே சோபித்த தேரர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.