முல்லைத்தீவு- ஐயன்கன்குளம் படுகொலை: நினைவேந்தலை மேற்கொள்ள தடை

முல்லைத்தீவு- ஐயன்கன்குளம் படுகொலை: நினைவேந்தலை மேற்கொள்ள தடை

முல்லைத்தீவு துணுக்காய் ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதியாகும்.

இந்த நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கும் காவல்துறையினர் தடை விதித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் நினைவேந்தல் நடத்தினால் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளதாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இராணுவத்தினரின் இந்த தாக்குதலால், அந்த நோயாளர் காவுவண்டியில் பயணித்த முதலுதவி கற்கைநெறிகளைப் பயின்ற மாணவிகளான நாகரத்தினம் பிரதீபா (16), நாகரத்தினம் மதிகரன் (15), நித்தியானந்தன் நிதர்சனா (13), கருணாகரன் கௌசிகா (15), சந்திரசேகரம் டிறோஜா (16), அற்புதராசா அஜித்நாத் (17)ஆகிய ஆறு மாணவ, மாணவிகள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (21) ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந் நிலையில் நினைவு நிகழ்வினை தடைசெய்யும் நோக்கில் மல்லாவி காவல்துறையினர் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுஜன்சனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நினைவு நிகழ்வினை நடத்த வேண்டாம் என்றும் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு பெற்ற மல்லாவி காவல்துறையினர் குறித்த இடத்திலும் மாவீரர் தின நிகழ்வுக்கான தடையுத்தரவை பெற்று குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கும் தடையுத்தரவை வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் உயிரிழந்த மாணவர்களை புதைத்த ஐயன்கன்குளம் மயானத்தில் குறித்த மாணவருக்கான நினைவேந்தல் நிகழ்வையும் தடைசெய்துள்ளனர்.

அதனைவிட உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்களையும் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குறித்த நிகழ்வினை செய்யக்கூடாது என அச்சுறுத்தி வருவதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோரை தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி நிகழ்வை கூட செய்யவிடாது தடுப்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீறி இந்த அரசு காட்டாட்சி நடத்துவதாகவே அர்த்தப்படும் என துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுஜன்சன் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *