இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் அன்று முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துமடிகையில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைகண்டு கவிதையொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது. அந்தக் கவிதை பின்வருமாறு,
முள்ளி வாய்க்காலில்
கஞ்சிக்காக கோப்பையுடன் நீண்ட வரிசையில்
பிஞ்சுகளெல்லாம் நின்ற போது
நெஞ்சை நிமிர்த்தியே வேடிக்கை பார்தீர்கள்
அக்கினியின் குஞ்சொன்று
விசுக்கோத்து சாப்பிட்டபின்
மார்துளைத்து செத்து கிடந்தபோதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
பிடிபட்ட பெண்டிர்களை நிர்மூலம் ஆக்கிவிட்டு
சிரித்து நின்ற போதும் வேடிக்கை தானே பார்த்தீர்கள்
சாலையோரம் போனவர்கள்
காணாமல் போனபோது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
வைத்தியசாலைகள் மீது குண்டுகள் பொழிந்த போது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும்
கந்தக குண்டை வீசும் போது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
கிழங்குக்காக வரிசையில் நின்றவர்களை
கிளஸ்ரர் குண்டு போட்டு அவிந்த போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
மருந்தும், மாத்திரையும் உணவும் ,
உடுப்பும் அங்கு அனுப்பாமல் விட்ட போதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
குண்டடிபட்டு இறந்தவள் மார்பில்
குழந்தை முலை சூப்பியபோது
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தோர்
எங்கென்று கேட்டபோதும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
முட்கம்பி வேலிகளுக்குள்
முன்னூறாயிரம் பேர் அடக்கி வைக்கயிலும்
வேடிக்கை தானே பார்த்தீர்கள்
அத்தியாவசியம் அனைத்துக்குமாய் இப்போது
நீண்ட வரிசையில் நீங்கள் நிற்கும் போது
எம்மால் உமைப்போல வேடிக்கை பார்க்க முடியவில்லை
மனம் கொதிக்கிறோம்
வேடிக்கை என்னவென்றால்
மேல்சொன்ன எல்லாவற்றையும்
எமக்கு தந்தவர்களால் தான் உமக்கும் தரப்படுகிறது
காலம் எவ்வளவு விரைவாக காட்டும் என்பது இதுதானா!
– மதுசுதன்