யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார் அதன் பின்னரே நிலைமையை சமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
நினைவுத்தூபி அழிக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததுமஇலங்கைக்கான இந்திய தூதுவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தொடர்புகொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அவ்வேளை பிரதமர் குருநாகலில் உள்ள தனது தொகுதியில் மக்களை சந்திப்பதில் ஈடுபட்டிருந்தார்.ஞாயிற்றுக்கிழமை பகல் பிரதமர் கொழும்பு திரும்பியதும் அவசரமாக அவரை சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்பல்கலைகழத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை குறித்து கடும் கரிசனை வெளியிட்டார்.இந்தியவெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெற்ற உடன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்தார் என அறிய முடிகின்றது.உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவையும் யாழ்பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராஜாவையும் தொடர்புகொண்டுள்ளார், திங்கட்கிழமை அதிகாலை வரை நிலைமையை சமூகமாக்குவதற்காக பிரதமர் அவர்களுடன் தொடர்பிலிருந்துள்ளார்.
இதன்காரணமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களும் இன்னொரு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர் திங்கட்கிழமை அதிகாலை அழிக்கப்பட்ட நினைவுத்தூபியின் கற்களை பயன்படுத்தியே அடிக்கல்நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.