முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்புக்கு வைகோ கண்டனம் .

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்புக்கு வைகோ கண்டனம் .

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி நாட்டில் அர்மீனியர்களைக் கொன்றது இனப்படுகொலைதான் என, உலக நாடுகள் இன்றைக்கு அறிவித்து இருக்கின்றன. அதுபோல, உங்களுடைய சிங்கள அரசினுடைய அடக்குமுறைக்கும் ஓர் எல்லை உண்டு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எழுந்த, தணிப்பரிய தாகமாம் தமிழ் ஈழத் தாயகம் என்கின்ற வேட்கையை வீழ்த்தி, வல்லரசு நாடுகள் சேர்ந்து, துடைத்து அழித்த முள்ளிவாய்க்கால், நம் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக இருக்கின்றது.குருதி கொப்பளிக்கும் இதயத்தில் எரிகின்ற வேதனையின் வெளிப்பாடாக, தமிழ் ஈழத் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் தோற்றுவிக்கப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணியிலும் ஓர் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டமைக்கப்பட்டது.

தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு யாரும் வரக்கூடாது; புகழ் வணக்கம் செலுத்தக் கூடாது என்று கருதுகின்ற சிங்களப் பேரினவாத அரசு அடக்குமுறையை மேற்கொண்டு இருக்கின்றது. வல்லாதிக்கத்தின் கோரக் காவலர்களை அங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறுவிடக் கொண்டு வரப்பட்ட நினைவுக்கல்லை, இரவோடு இரவாக அகற்றிக் கொண்டு போய்விட்டனர். ஏற்கனவே இருந்த நினைவுத் தூணையும் இடித்து நொறுக்கி உள்ளனர். யாரையும் உள்ளே நுழைய விடாமல், மறித்து நிற்கின்றார்கள்.

அடக்குமுறையால் இன உணர்வை ஒடுக்கி விட முனையும் சிங்களப் பேரினவாத அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி நாட்டில் அர்மீனியர்களைக் கொன்றது இனப்படுகொலைதான் என, உலக நாடுகள் இன்றைக்கு அறிவித்து இருக்கின்றன. அதுபோல, உங்களுடைய அடக்குமுறைக்கும் ஓர் எல்லை உண்டு.சில மாதங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூணை உடைத்தார்கள். உலக நாடுகள் கண்டனத்திற்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது. அதேபோல, இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும். ஐ.நா. மன்றம் அமைத்த குழு அளித்த அறிக்கையின்படி, முள்ளிவாய்க்காலில் மட்டும் 1.37 இலட்சம் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இன்று அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் தடை விதிக்கின்றார்கள்.

மே 17 ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் வேட்டை ஆடப்பட்ட தமிழ் இனக் கொழுந்துகளின் நினைவுகளை நமது நெஞ்சில் ஏந்துவோம். வழக்கமாக தாயகத்தில் கூடுவோம்; கொரோனா முடக்கம் காரணமாக, இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இல்லை;எனவே, நமது இல்லங்களில் இருந்தே, வீரவணக்கம் செலுத்துவோம். தமிழ்நாட்டில் ஒரு புதிய விடியல் தோன்றி இருக்கின்ற இந்த வேளையில், இன்று இல்லாவிட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் அல்லது என்றேனும் ஓர் நாள், தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய பணிகளைத் தொடருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *