தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மாத்திரமன்றி தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் செயற்பாடுகளில் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“மே -12 ஆம் திகதி (இன்று) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் ஆரம்பிக்கின்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் விதமாகவும் இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவும் சிங்களப் பேரினவாதம் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை தெளிவாகத்தான் செயற்படுத்துகின்றது.
தென்னிலங்கையில் என்ன தான் பிரச்சினை நடந்தாலும், எவ்வளவு தான் கலவரம் நடந்தாலும் எங்களுடைய உணர்வுகளை அடக்குவதில் பேரினவாத சக்திகள் இணைந்து செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆகவே இந்தக் காலப்பகுதியில் குறிப்பாக இளைஞர்களைத் திருப்பி திருப்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் செய்யும் செயற்பாடுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளையும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளையும் குழப்பும் வகையிலான தடை உத்தரவுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
இம்முறை முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்காக அந்த மண்ணை பார்ப்பதற்காக அதிகளவான மக்கள் வருவார்கள். காரணம் உங்களுக்குத் தெரியும். தென்னிலங்கையில் சில சம்பவங்கள் இம்மாதத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஆகவே இப்படியான நிகழ்வுகள் இருக்கும்போது நமது இளைஞர்கள் சரியானதொரு தீர்க்கமான முடிவில் இருக்க வேண்டும்.
எனவே வன்முறைகளைத் தவிர்த்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்க பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை கேட்டுக்கொள்கின்றது” என்றார்.