மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் கொழும்பில் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதன்போது எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணை தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே புதிய பிரேரணைக்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும் இரண்டாம் கட்டச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய முன்னணியினரும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த இரண்டு சந்திப்புக்களிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால், அவரது சார்பில் கிளிநொச்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த க.அருந்தவபாலன் வவுனியாக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

அக்கூட்டணியைச் சேர்ந்த பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கமும் வவுனியா கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அக்கூட்டத்தின்போது, ஜெனிவாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை தொடர்பில் பல்வேறு கருத்தாடல்களும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் பூரணமான இணக்கம் இன்னும் ஏற்படாத நிலையில் கொழும்பில் இன்று அரசியல் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

விசேடமாக இந்தச் சந்திப்பு கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளன என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *