மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில

மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில

வடக்கில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருப்பது இந்தியாவிற்கு அதிர்ச்சிக்குரிய தகவலாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர் கட்சிகள் கடுமையான விசனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் அரசியல் பிரமுகர்களும் இது தொடர்பில் தங்களின் அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.

இதற்கிடையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இலங்கை சீனாவின் காலனித்துவமாக மாறிக் கொண்டிருப்பதாகவும், உயிரைக் கொடுத்து மீட்கப்பட்ட நாடு தற்போது சீனாவிடம் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் சூரிய சக்தி மின் உற்பத்திகளுக்காக வடக்கிலுள்ள தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா? எனவும், அரசின் இந்தத் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “விலைமனுக் கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்துக்கு அந்தத் தீவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.

எவ்வாறாயினும் அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்தத் தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் என்றார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், வடக்கின் தீவுகள் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருப்பதனால் இந்தியா இது தொடர்பில் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், கிழக்கு முனைய விவகாரமும் இந்தியாவிற்கு கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ள நிலையில் வடக்கின் தீவுகள் சீனாவிற்கு கொடுப்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையானது இந்தியாவை சீண்டும் செயலாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *