சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.
சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.
இந தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்துள்ளனர்.பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிடக் குவிந்துள்ளனர்.