காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது.இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (26) அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவனின் ஒரு காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணைகள் இடம்பெற்றது.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினைப் பெற்ற யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிக்கையிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் அறிந்த வடக்கு மாகாண கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையிடுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (26) மாணவனை அழைத்த அதிபர் காற்சட்டை பொக்கெற்றுக்குள் கைகளை வைத்திருக்குமாறு தெரிவித்துவிட்டு 7 தடவைகள் காதுகளில் அறைந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அங்கங்கள் பலவீமடையும் வகையில் தாக்குவது சித்திரவதை என்ற அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.