கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதும் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் எனவும் இந்திய நிதியுதவியுடன் அடுத்த கட்ட புனரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித தீர்மானமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வழங்கியுள்ள 300 மில்லியன் ரூபா நிதியுதவியை பயன்படுத்தி, யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்த கட்ட புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இந்தியத் துணைத் தூதுவருக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான போலி கதைகளை பரப்பி விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 13வது திருத்தம் நீக்கப்பட போவதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், அந்த செய்தியும் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.