தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக புராதனக் கட்டடமாக உள்ள தொகுதி மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ள கட்டடத்தொகுதி, ஜி.ஓ.எச் விடுதி உட்பட கொழும்பில் உள்ள பழைமைவாய்ந்த கட்டடங்கள் மற்றும் யாழ்ப்பாணம் கண்காட்சி மத்திய நிலையம் ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது.
உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாகக் கூறி ஸ்ரீலங்கா சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளை மத்திய அரசிடம் இருந்து சஹஸ்யா என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சூழ்ச்சியும் இடம்பெற்று வருகிறது.
இதனூடாக அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள காணிகளும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவே தகவல்கள் கூறுகின்றன. இன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பணமில்லை. நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உள்நாட்டு சொத்துக்களை இவ்வாறு விற்பனை செய்து ஏப்பமிட ராஜபக்ச அரசாங்கம் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.