சிறைக்குள் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை சூட்சமமாக கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தின் இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அமைச்சர் ரொஹான் ரத்வத்தே, ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது அவரை பாதுகாக்க வேண்டியது தனது பொறுப்பு எனவும், இப்போதே அவரை தனி சிறைக்கூடத்திற்கு மாற்றுவதாகவும் வாக்குறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவரை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற காரணிகளை சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடச் சென்ற வேளையில் அவர் என்னிடம் பல காரணிகளை கூறினார்.
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களுக்கு எதிராக பேசினார்.
அவ்வாறு பேசியவருக்கு இன்று இலங்கையிலுள்ள மோசமான கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அங்குனுகொலபலச சிறையில் இருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
எனவே உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் ரஞ்சன் ராமநாயகவை வெளிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.