ரணில் விக்ரமசிங்க கேள்வி ! இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கின்றதா அரசாங்கம் ?

ரணில் விக்ரமசிங்க கேள்வி ! இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கின்றதா அரசாங்கம் ?

அரசாங்கம் இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஆற்றிய கன்னி உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு பாரதூரமான ஓர் நிலையில் காணப்படுவதாகவும் வெறும் புள்ளி விபரங்களை நாடாளுமன்றில் ஒப்புவிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட விரும்பாவிட்டால் மாற்று வழி என்ன என்பதனை நாடாளுமன்றில் தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பிரதான மூன்று கட்டமைப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல் அதிகாரம், அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட சிவில் அதிகாரம் மற்றும் இராணுவ அதிகாரம் என்பனவே அவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டில் இராணுவ அதிகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் ஒழிப்பு குறித்த தேசிய செயலணி நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் நிபுணர்களைக் கொண்டே கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கையில் மட்டுமே இராணுவத் தளபதியிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டாளர்களுடனான கூட்டத்திலும் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொள்வதாகவும் அவ்வாறான கூட்டங்களில் நிதி அமைச்சர் ராஜாங்க அமைச்சர் பங்கேற்பது நியாயம் என்ற போதிலும் இராணுவத் தளபதிக்கு அங்கு வேலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கூட்டங்களில் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொண்டால் வரும் முதலீட்டாளர்களும் ஓடி விடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்த்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமைச்சரவை, நாடாளுமன்றம் தீர்மானங்களை எடுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கை அமைச்சரவையிடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க 1977ம் ஆண்டு முதல் இதுவரையில் தொடர்ச்சியாக 44 ஆண்டுகள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *