இஸ்ரேலுக்கும், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது.ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைகளை வீசி வருகிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அவற்றை இஸ்ரேல் இடைமறித்து நடுவானிலே அழித்து வருகிறது. இவ்வாறு 90 சதவீத ஏவுகணைகளை அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறியது.
ஹமாஸ் இயக்கத்தினர் நேற்று மட்டுமே 100 ஏவுகணைகளுக்கு மேல் வீசினார்கள். இதனால் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஏற்கனவே பல பெரிய கட்டிடங்களை இஸ்ரேல் தகர்த்து இருந்தது. நேற்றும் அதேபோல காசா நகரில் உள்ள முக்கிய கட்டிடங்களை குறி வைத்து தாக்கியது.இதில் 3 பிரதான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. என்றும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 42 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் 16 பேர் பெண்கள், 10 பேர் குழந்தைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 200 பேர் பலியாகி இருப்பதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இந்தநிலையில் தரை வழியாக நுழைவதற்கு இஸ்ரேல் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அவ்வாறு தரைவழியாக படைகள் நுழைந்தால் மிகப்பெரிய போராக உருவெடுக்கும். எனவே மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் அல்ஜசீரா செய்தி நிறுவனம், ஏ.பி செய்தி நிறுவனம் ஆகியவை இயங்கி வந்த 13 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக அல்ஜசீரா டி.வி. ஒளிபரப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் எங்களுடைய ஒளிபரப்பை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இந்த தாக்குதல் நாங்கள் உண்மையை வெளிக்கொணருவதை தடுத்து நிறுத்த முடியாது என்று அல்ஜசீரா தலைவர் வாலித் அல் ஒபாரி தெரிவித்து உள்ளார்.
இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஜவாத்மெப்தி கூறும்போது, “கட்டிடத்தை தகர்ப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே எங்களுக்கு தகவல் சொன்னார்கள். உரிய அவகாசம் கொடுக்கவில்லை. இதனால் எந்த பொருளையும் நாங்கள் எடுக்க முடியவில்லை” என்று கூறினார்.