அமெரிக்கா மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து சைபர் தாக்குதல் நடைபெற்று வந்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப், சைபர் தாக்குதலின் பாதிப்புகள் உண்மையில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன.
இது பற்றி எனக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலையில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷ்யா இல்லை.ஆனால் சீனாவின் பங்கு பற்றி விவாதிப்பதற்கு ஊடகங்களே பயப்படுகின்றன என்றார்.
இருப்பினும் சைபர் தாக்குதல் தொடர்பாக சீனா மீது முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் எவ்வித ஆதாரங்களையும் வழங்கவில்லை.
சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்தறை அமைச்சர் மைக் பொம்பியோவும் இத் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என தெரிவித்திருந்தார்.
ஆனால் அதிபர் ட்ரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்து, சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா அல்ல சீனா தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.