ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது இவர்களது இனவாத பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வு திட்டத்தை, புதிய அரசியல் அமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்த போது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாத தீயை பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கி தள்ளி ஆரம்பித்த பணியினை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை.

அதைபோல், அமெரிக்க அரசுடன் எம்சிசி ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போது, அதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்தி, இதுபற்றி ஒன்றுமே தெரியாத, வண. உடுதும்பர காஸ்யப்ப என்ற பெளத்த தேரரை கொண்டு வந்து எம்சிசிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள், இவர்களாகும்.

பின்னர் ஆட்சிக்கு வந்த உடன், எம்சிசி ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இனாமாக தர இருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். எம்சிசி ஒப்பந்தத்தில், 70 விகிதம் நல்லதே என உதய கம்மன்பில என்ற தமிழ், முஸ்லிம் மக்களை சதா கரித்து கொட்டித்தீர்க்கும் அமைச்சர் சொன்னார். ஆனால், கடைசியில் “சரிதான் போங்கடா” என, அமெரிக்கா எம்சிசி ஒப்பந்தத்தையும், 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் எடுத்துக்கொண்டு போயே போய் விட்டது.

“ஐயோ, கைக்கு வந்தது, வாய்க்கு எட்டவில்லையே” என கையை விட்டு போய்விட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நினைத்து நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

அதைபோல், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளை பங்காளிகளாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது, அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு தெருவில் இறக்கி அரசியல் செய்த, மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய கூட்டணி, இன்று நந்தசேன கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி அமைத்தவுடன், சுருதி இறங்கி பேசுகிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதவும் முடியாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள, இதே கொழும்பு துறைமுகத்தில் 85 விகித பங்குரிமையுடன் இவர்கள் சீனாவின் சைனா மெர்ச்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள சீஐசீடி என்ற இன்னொரு முனையத்தை திரும்பி வாங்கவும் முடியாமல், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், விழி பிதுங்கி போய் நிற்கிறது.

இந்நிலையில் இந்த அரசில் இருக்கும் ஒரு அரை அமைச்சரான நிமல் லான்சா, “கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை யார் தடுத்தாலும், இந்தியாவுக்கு வழங்கியே தீருவோம்” என வெட்டி வீறாப்பு பேசுகிறார். இதை இவர் இன்றைய எதிரணியான எங்களிடம் கூற தேவையில்லை.

தெரியாமல் வாக்களித்த பொதுமக்களிடம் கூற தேவையில்லை. எதிர்கட்சியில் இருக்கும் போது இவர்களே ஊட்டி வளர்த்த இவர்களது கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர், வண. ஓமல்பே சோபித தேரர், வண. முருத்தெட்டுகம தேரர் ஆகிய பெளத்த தேரர்களிடம்தான் கூற வேண்டும் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *