இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி – ஆட்சி மாறினாலும் சரி கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவர்களைக் காண முடியாது என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார்.நாட்டை திறம்பட அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றவர்களே இவர்கள் என இசாக் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.கிண்ணியாவில் நேற்று (10) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சமூகமே ஏமாந்து விடாதீர்கள். கல்வி மார்க்கத்தில் அக்கறை கொண்ட நாங்கள் சிலரின் இனவாத பேச்சுக்களுக்கு ஏமாறக்கூடாது.இனவாதம், மதவாதம் ஒழிய வேண்டும். கண்ணியமாகவும் கௌரவமாகவும் நாம் சிறுபான்மைச் சமூகமாக வாழவேண்டுமானால் தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனே இணைந்து வாழவேண்டும். அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவனை யாராலும் கண்டு கொள்ள முடியாது.
எங்கள் ஏழுபேரையும் பாரிய அபிவிருத்தி ஊடாக இணைத்துக் கொண்டு செல்லும் நிமால் லான்சா போன்ற இராஜாங்க அமைச்சரும் இங்கு இருக்கிறார்.அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாட்டு பிரதமர் எங்களிடம் கூறியதாவது கன்னியமாக வாழவேண்டுமானால் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என்று தான்.உலகின் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமைகளுடன் தற்போது இணைந்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்றார்.