ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி, தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார், கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் M.N.ரஹுலின் கையெழுத்துடனான சட்ட வைத்திய அறிக்கையை, பொரள்ளை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி எவ்வித தாக்குதல்களுக்கும் இலக்காக இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் தீ பரவியமையினால், உடலின் 72 வீதத்திற்கும் அதிகமான பகுதியில் தீ காயங்கள் காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறுமி கர்ப்பமடையவில்லை என்ற போதிலும், அவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுமியின் உடலில் ஏற்பட்ட தீ காயங்களுக்குள் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளமையே, சிறுமி உயிரிழப்பதற்கான காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.