இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்கிற பெருமையை அவர் பெற்றார். இந்தநிலையில் இவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதமே லண்டனில் மேயர் தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் கொரரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமை லண்டன் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் சாதிக் கான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 57 வயதான சாதிக் கான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஷான் பெய்லியை விட 10.4 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதுகுறித்து சாதிக்கான் கூறுகையில் ‘‘பூமியின் மிகப் பெரிய நகரத்தை தொடர்ந்து வழிநடத்த லண்டன் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் மிகவும் தாழ்மையுடன் ஏற்கிறேன். தொற்று நோயின் இருண்ட நாட்களுக்குப் பிறகு லண்டனுக்கு ஒரு சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவுவேன். அனைத்து லண்டன் மக்களுக்கும் ஒரு பசுமையான, சிறந்த மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதற்கும் அவர்களின் திறனை பூர்த்தி செய்ய தேவையான வாய்ப்புகளை பெறுவதற்கும் நான் உறுதியளிக்கிறேன்’’ என கூறினார்.