லெபனான் நாட்டில் போதிய அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் பாதி அளவு மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த நிலையில் துருக்கியை சேர்ந்த மின்சார உற்பத்தி நிறுவனம் மிதக்கும் மின்நிலையத்தை கடலில் நிறுத்தி அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து லெபனானுக்கு வழங்கி வந்தது.
இவ்வாறு 2 மிதக்கும் நிலையங்கள் லெபனானில் நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் மூலம் 370 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு லெபனானுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் லெபனான் நாட்டில் அரசியல் குழப்பங்களால் அங்கு நிலையான அரசு இல்லை. இதன் காரணமாக கடந்த 18 மாதங்களாக மின்சார நிறுவனத்திற்கு உரிய பணத்தை செலுத்தவில்லை.
எனவே அந்த நிறுவனம் மின்சார உற்பத்தியை நிறுத்தி விட்டது. இதனால் லெபனானுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்கவில்லை. நாட்டின் 3-ல் ஒரு பகுதி மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கிறது.
முக்கிய நகரங்கள் பலவும் இருளில் மூழ்கி கிடக்கின்றன. தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரமும் இல்லை. எனவே லெபனான் நாடே மின்சாரம் இல்லாமல் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.