லெப்டினன்ட்-கேணல்-மல்லி

லெப்டினன்ட்-கேணல்-மல்லி

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப்டினன்ட் கேணல் மல்லி.

லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன்.

இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

போர் ஓய்வு மீறல்…

திருமதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருவாரப் போர் ஓய்விற்கு எதிராக சிறிலங்காப் படையினர் 17.11.1994 நெடுங்கேணியில் பதுங்கித் தாக்கியதில் எமது மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி வீரச்சாவை அடைந்தான். அவனது தலையை படையினர் கோரமாக வெட்டி எடுத்துச் சென்றனர்.

விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு வார கால போர் ஓய்வையும், இப்போர் ஓய்வு தொடர்பாக ‘விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்கம் அதற்குப் பிரதிகூலமாக நடந்துகொள்ளும். மோதல்கள் தவிர்க்கப்படுமானால் அது சம்பிரதாயபூர்வ போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேணல் அனுரத்த ரத்வத்த அறிவித்ததையும் உதாசீனப்படுத்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக நடாத்தப்பட்ட தாக்குதல் ஆறாவது போர் ஓய்வு மீறல் நடவடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் அதே பகுதியில் இரு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு அரசகரும மொழியினால் தூசிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிடவும் மட்டக்களப்பு அரிப்பு கடல் பகுதி, வடமராட்சிக் கடற்பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும் சாவகச்சேரியில் பயணிகள் பேருந்து உலங்குவானூர்தியிலிருந்து தாக்குதலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. நெடுங்கேணியில் வீரச்சாவெய்திய மூத்த தளபதி லெப்.கேணல் மல்லியின் தலையை வெட்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அதனைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். 1990க்குப் பின்னர் இவ்வாறான செயலில் இப்பகுதி இராணுவத்தினர் ஈடுபடுவது இரண்டாவது தடவையாக இருக்கின்றது. 1987இல் மன்னார் ஆட்காட்டி வெளியில் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்டரின் புதைகுழியைத் தோண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அவரது தலையையும் வெட்டியெடுத்துச் சென்றிருந்தனர். கொலைவெறியும், ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் செயல்கள் கட்டுமீறிச் செல்கின்ற வேளையில் எல்லாம் சிம்ம சொப்பனமாய் நின்ற அந்த வீரர்களின் பெயர்களைக் கேட்டாலே நடுங்குகின்றவர்களாய் இராணுவம் இருந்ததின் எதிர் விளைவுகளாய் அவர்களது இச் செயல்கள் அமைகின்றன.

மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் இவ் இழி செயலுக்குரியவரின் கூடாரமாய் சிறிலங்கா இராணுவம் மாறிவருவதை இச்செயல்கள் காட்டுகின்றன.

ஆர்த்தெழும் கடலென மக்கள்…

இத் தாக்குதலில் வீரமரணமடைந்த மல்லிக்கும் அவருடன் வீரமரணமடைந்த வீரவேங்கை அருளப்பனுக்கும் அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்திற்கு மாவீரரின் பூதவுடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஒலிபெருக்கி வாகனம் முன்செல்ல புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மாணவர்களின் ‘பாண்ட்’ வாத்திய இசையுடன் மாணவர்கள் தொடர அரச ஊழியர்கள், விடுதலைப் புலிகள், காவல்துறையினர் அனைவரும் அணிவகுத்துச் சென்றனர்.

வன்னி மாவட்ட அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் புவிதரன் – முல்லைக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் இசையருவன் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். மல்லியின் வீரச்சாவினால் புதுக்குடியிருப்பு சோகமாயிருந்தது. வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் பறந்தன. தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதுவரை காணாத அளவிற்கு பெருந்தொகையான மக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

நன்றி: எரிமலை இதழ்கள் (தை 1995 – மாசி 2002).

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *