மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜனதா தொண்டர்களும் மோதிக்கொண்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் பிரிவு போலீஸ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். வன்முறைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குச்சாவடி மூடப்பட்டது.
கிராம மக்களே திரண்டு வந்து பாதுகாப்பு படை வீரர்களை தாக்கியதுடன், போலீசாரின் துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை கேட்டு உள்ளார். சிறப்பு பார்வையாளர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. விரிவான அறிக்கை இன்று மாலையில் மாநில தேர்தல் அதிகாரி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.துப்பாக்கி சூடு நடத்தியது திட்டமிட்ட சதி என்றும், இதைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளதாகவும் அக்கட்சியின் எம்பி சுகதா ராய் தெரிவித்தார்.