கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.இதற்கமைய, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்க முயற்சிக்கும் அரசாங்கம், தமது வரம்பை மீறுவதற்கு முற்படுவதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நீதித்துறையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிலரை அரசாங்கம் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஆணைக்குழு அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள், சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலங்களை பெறுவதற்கு அப்பால் ஏனையோரிடம் விசாரணைகளை நடத்துவதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தன்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்திற்கும், நீதிக்கும் அப்பால் சென்று செயற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.