பத்திரிகையாளரும் அரசுக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை தேடப்படும் நபராக பெலாரஸ் நாடு அறிவித்து அவரை கைது செய்ய முனைப்பு காட்டி வந்தது. போலந்த் நாட்டில் இருந்த புரோட்டசெவிச் விமானம் மூலம் லிதுவேனியாவிற்கு சென்றார். புரோட்டசெவிச் விமானத்தில் பயணிப்பதை அறிந்த பெலாரஸ் FR4978- விமானத்தை போர் விமானத்தால் வழிமறித்து மின்ஸ்க் நகரில் தரையிறங்க வைத்து, புரோடேஸ்விச்சை கைது செய்துள்ளது.
பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக கடத்தி தரையிறக்கிய பெலாரஸ் அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெலாரஸ் அரசின் செயல் விமான கடத்தல் சம்பவம் என்றும் அரசு பயங்கரவாதம் எனவும் சர்வதேச தலைவர்கள் விமர்சித்துள்ளனர். புரோட்டசெவிச் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.இந்த நிலையில் இங்கிலாந்து அந்நாட்டின் விமான நிறுவனங்களுக்கு பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்து செயலாளர் பிராண்ட் ஷேப்ஸ், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ‘‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்’’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து வெளிநாட்டுத்துறை செயலாளர் டொமினிக் ராப் ‘‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரசின் லூகாஷென்கோ அரசுக்கு மேலும் தடைகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இங்கிலாந்துக்கான பெலாரஸ் தூதருக்கு இதுகுறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்து’’ என்றார்.
ஆனால் பெலாரஸ் ஊடகம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் மின்ஸ்க் திருப்பி விடப்பட்டது. அதிபர் லூகாஷென்கோ தனிப்பட்ட முறையில் MiG-29 போர் விமானத்தை பாதுகாப்பிற்காக அனுப்பி உத்தரவிட்டார் எனத் தெரிவித்துள்ளது.
அரசு பத்திரிகையாளரை விடுதலை செய்வதோடு பெலாரஸ் ஜெயிலில் இருக்கும் மற்ற அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது.விமானம் தரையிறக்கம் விவகாரத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்பதற்கான முழு விவரங்களையும் நாங்கள் அவசரமாக நாடுகிறோம். சூழ்நிலையை பார்க்கும்போது சிவில் விமானப் போக்குவரத்து மீதான அதிர்ச்சியூட்டும் தாக்குதல் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீதான தாக்குதல் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.