விக்கியின் முன்மொழிவு – சம்பந்தன்,கஜன் அணிகளுக்கு சமர்ப்பிப்பு.!

விக்கியின் முன்மொழிவு – சம்பந்தன்,கஜன் அணிகளுக்கு சமர்ப்பிப்பு.!

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநீதிகள் என்பன தொடர்பில் நீதியான – பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை உள்ளடங்கலாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு முன்வைக்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முன்மொழிவுகளை அதன் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்குச் சமர்ப்பிப்பதற்காக என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஒரு முன்மொழிவை எனக்கு அனுப்பியிருந்தார். எனது பார்வையில் அது இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பு வழங்கும் ஒரு முன்மொழிவாகவே உள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே 6 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேலும் அப்படி வழங்கப்படக்கூடாது.

ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுக்கும் சமர்ப்பிப்பதற்காக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முன்மொழிவு ஒன்றைத் தயாரித்துள்ளது. அந்த முன்மொழிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அதனை ஒரு பொதுவான முன்மொழிவாகச் சமர்ப்பிக்க முடியும்.

அந்த முன்மொழிவில் முக்கியமான சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

* ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு 6 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது.

* இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

* இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சிரியா, மியன்மார் போன்ற நாடுகளில் அமைக்கப்பட்ட விசேட நிபுணர் குழு போன்றதொரு செயற்பாட்டை ஐ.நா. இலங்கையிலும் நிறுவ வேண்டும்.

* ஐ.நா. விசேட கண்காணிப்பாளர் ஒருவரை இலங்கையில் நியமிக்க வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளுடன் மேலும் பல விடயங்களை எமது முன்மொழிவில் உள்ளடக்கியுள்ளோம்” – என்றார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *