நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்க்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது அனுபவிக்கிறார் எனவும் இவர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்க்ஷர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்தத் தெரிவிக்கையில்.கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. இச்சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்காத வகையில் பொது விடுமுறை காலத்தில் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் குறுகிய நோக்கம் பெற்றிப் பெறவில்லை.
இச்சட்ட மூலத்திற்கு எதிராக பல மனுக்கல் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்ட மூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்க்ஷ குறிப்பிட்ட கருத்தினால் ஜனாதிபதி அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தை பெரிதுப்படுத்துவது அவசிமற்றது. முன்வினையின் பயனை விஜயதாஸ ராஜபக்க்ஷ தற்போது அனுபவிக்கிறார்.
திருடர்களுக்கு தண்டனை வழங்குவதாக குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தது. இவ்வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு இவ்வாறானவர்களும் ஒரு காரணியாகும். நீதியமைச்சர் பதவி வகித்துகொண்டு ஒரு தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டமை குறித்து இவரே பல முறை பகிரங்கமாக ஊடகங்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.இவரது அரசியல் செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தமிழர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் அதற்கு இடமளிக்க கூடாது என்று போலியான குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.
69 லட்ச மக்களும் பொய்யான வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.இனியாவது பெரும்பான்மை மக்கள் உண்மை தன்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றம் எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பதை குறிப்பிட முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் நீதித்துறையினையே இறுதியாக நம்பியுள்ளார்கள்.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.