பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தி வந்தனர். மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று, பிரான்சில் 6 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரேசில் நாட்டுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரேசிலில் இருந்து பிரான்சுக்கு வரும் விமானங்கள் மற்றும் பிரான்சில் இருந்து பிரேசிலுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.