ராஜபக்ஷ அரசாங்கம் தாய் நாட்டை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ராஜபக்ஷ அரசாங்கம் பணத்தை தேடும் வகையில் புதிய ஒரு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது. தாய் நாட்டை விற்று அதன் மூலம் பணத்தைப் பெறும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்கள். தாய் நாடு எமக்கு இருக்கும் பரம்பரையான சொத்து.
தாய் நாட்டில் நிலமே முக்கியமானது. விசேடமாக கொழும்பு. மிகவும் பெறுமதியான இடங்களை வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்பனை செய்வது ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்க நிறுவனம் ஒன்றின் ஊடாக நில விற்பனையில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. தற்பொது கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 15 ஏக்கர் நிலப்பரப்பை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலப்பரப்பில் பிரபல பாடசாலைகள், இராணுவ தளங்கள், நிதி திணைக்களங்கள், வியாபார நிலையங்கள் அமைந்துள்ளன. நிதிப் பற்றாக்குறைக்கு தாய் நாட்டை விற்பனை செய்வதன் ஊடாக இந்த அரசாங்கம் எதிர்கால சந்ததியினருக்கு துரோகம் இழைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.