விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு இன்று உப தவிசாளர் வே.சச்சிதானந்தம்(V.sashitantam) தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, விலைவாசி அதிகரிப்பால் மக்கள் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் பிரதிநிதிகளான நாம் வாழாவிருக்க முடியாது என்றும் இதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை விடுத்தார்.
சபையை 30 நிமிடங்கள் ஒத்திவைத்து சபைக்கு முன்பாக வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முன்வருமாறு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். எனினும் சபையை ஒத்திவைக்க ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஈ.பி.டி.பியுடன் இணைந்து எதிர்த்தார். பின்னர், உப தவிசாளர் உட்பட 14 உறுப்பினர்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.