காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது கோமா நகரம். வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் மையமாக விளங்கும் இந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மவுன்ட் நிரயகாங்கோ எனும் பெரிய எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு எரிமலை வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை கக்கியது. எரிமலை வெடித்ததையடுத்து கோமா நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றப்பட்டுவருகின்றனர். அனைத்து பகுதிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு மக்கள் உஷார்படுத்தப்பட்டனர். பொதுமக்கள் வெளியேறிய பகுதிகளில் நெருப்பு குழம்பு சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சாம்பலாகி உள்ளன. உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எரிமலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு 1997 மற்றும் 2002-ல் இந்த எரிமலை வெடித்தது. 2002ல் எரிமலை வெடித்தபோது 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.