கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சி அங்கு பதற்றமும் நிலவியிருந்தது.
இதனையடுத்து தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரின் கடும் பிரயத்தனத்தினால் தீ பரவல் கட்டுப்பாட்டக்குள் வந்தது. இதன்போது கனகபுரம் முறிப்பு வீதியின் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அத்துடன் அதிகளவான மக்கள் கூடியிருந்தமையால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.
அதேவேளை தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து பொது மக்களும், வர்த்தகர்களும், பிரதேச சபை உத்தியோகத்தர்களும் துரிதமாக செயற்பட்டு சுமார் 1 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் மின்னொளுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த தீப்பரவல் காரணமாக பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிற நிலையில் அது தொடர்பிலான சேதவைபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.