கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- இலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,593- பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் ஆவர். தனிமைப்படுத்தலின் போது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு மாதத்தில் 3,480- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்தவர்கள் ஆவர். ஆகவே, இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் குறித்த மேலாண்மை திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.