வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களே இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று(16.06.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

மாகாணசபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்பது தொடர்பாக அமைச்சவையில் பிரஸ்தாபிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தன்னுடைய ஆட்சேபனையை பதிவு செய்த கடற்றொழில் அமைச்சர், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிரப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், மாவட்ட பொது வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று நிலையங்கள் போன்றவை மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவற்றை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதுடன் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வினை எதிர்பார்க்கின்ற மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செயற்பாடாகவும் அமையும் என்றும் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, மாவட்டங்களுக்கான சுகாதார வசதிகளை உயர் தரத்தில் வழங்கும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசேட குழுவொன்றினை அமைத்து, இதுதொடர்பாக ஆராயப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அக்காலப் பகுதியில் தனக்கிருந்த அரசியல் பலத்தினைப் பயன்படுத்தி, மாகாண சபைக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்வதை தடுத்து நிறுத்தியதாகவும்,

எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் தன்னிடம் இல்லையெனவும் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவு, இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *