இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் மீது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது என முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஓவலில் 50 வருட வரலாற்றை மாற்றி எழுதி இந்திய அணி சாதனை படைத்தது.
இந்திய அணியின் இந்த வெற்றியில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாகூர் மற்றும் பும்ராவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. ரோகித்தின் சதம், தாகூரின் இரு அரைசதங்கள் என பேட்டிங்கில் இவர்கள் கலக்கினர். குறிப்பாக ஷர்துல் தாகூர் பந்துவீச்சிலும் மாஸ் காட்டி அடுத்த கபில்தேவ் என்று புகழும் அளவுக்கு செயல்பட்டார். இந்நிலையில் வெறும் இரண்டு போட்டிகளை அடிப்படையாக வைத்து ஷர்துல் தாகூர் விஷயத்தில் அவசரப்படுவது சரியல்ல என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மிக சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாகூரை ஆல்ரவுண்டராக கருதி அவரை 7வது இடத்தில் களமிறக்குவது அவருக்கு கூடுதல் அழுத்தத்தை மட்டுமே கொடுக்கும் எனவும் பதான் கூறியுள்ளார். அவரின் விஷயத்தில் அனைவரும் பொறுமை காத்து, அவருக்கான நேரத்தை கொடுப்பது தான் சரியானதாக இருக்கும் என பதான் தெரிவித்துள்ளார்.