இலங்கையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிஐடியின் ஷானிஅபயசேகரவிற்கு எதிராக போலிகுற்றச்சாட்டுகளை சுமத்துமாறு வெளிநாட்டு வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் கேட்டுக்கொள்ளப்பட்டமை குறித்த விபரங்களை பிபிசியின் சிங்கள சேவை அம்பலப்படுத்தியுள்ளது. தன்னை பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திய நபர் ஒருவரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.சுவீடனில் வசிக்கும் சமலி மதநாயக்க என்ற பெண்ணொருவர் 2019 இல் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிவைத்தியலங்காரவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை தொடர்புகொண்ட நபர் ஒருவர் நீங்கள் ரவிவைத்தியலங்காரவிற்கு எதிராக முறைப்பாடு செய்தீர்களா என கேட்டார் என அந்த பெண் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.நான் ஆம் என தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் ஷானி அபயசேகரவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியுமா என என்னை கேட்டார் என சுவீடனில் வசிக்கும் இலங்கை பெண் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.நான் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் நான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யுங்கள் என கேட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் உடனடியாக தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார் என தெரிவித்துள்ள அவர் அந்த தொலைபேசி இலக்கமொன்றை நான் உடனடியாக தொடர்புகொண்டவேளை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அது உள்துறை அமைச்சின் இலக்கம் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த விடயம் குறித்து பிபிசி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை தொடர்புகொண்டவேளை அவர் இவ்வாறான வதந்திகளை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.எனினும் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.