ஸ்ரீலங்கா தொடர்பில் அமெரிக்கா தயாராக இருக்கிறதா? அமெரிக்கா – உதவியும் உபத்திரவமும் – ஹரிகரன்

ஸ்ரீலங்கா தொடர்பில் அமெரிக்கா தயாராக இருக்கிறதா? அமெரிக்கா – உதவியும் உபத்திரவமும் – ஹரிகரன்

அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை.

2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் செலவினங்களுக்காக, 2.3 ட்ரில்லியன் டொலர் கள் நிதியை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அதில் கையெழுத்திட்டுள்ளார்.

கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், குறிப்பிட்ட நிதி வெளிநாடுகளுக்கான உதவிகளுக்காகவும் கோரப்படுவது வழக்கம். அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கவும், சர்வதேச அளவில் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் உதவிப் பணிகளுக்காகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதி ஒதுக்கீட்டைக் கோரும்.

2012ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் யுஎஸ்எய்ட் ஆகியவற்றின் சர்வதேச விவகாரங்களுக்கான செலவினங்களுக்காக, 41 பில்லியன் டொலர்கள் நிதி கோரப்பட்டது. இந்த நிலையிலேயே, எதிர்வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவிக்கும் குறிப்பாக, ஜனநாயகம், மற்றும், இன மற்றும் மத மோதல்களில் இருந்து மீண்டெழும் பகுதிகளின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கான நிதி உதவி இரண்டு விதங்களில் முன்மொழியப்பட்டுள்ளது. முதலாவது, பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலான உதவி.

இன்னொன்று சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது. ஆனால், இலங்கைக்கு நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை.

இதற்கு கட்டுப்பாடு அல்லது நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் மூலம், இலங்கைக்கான நிதி உதவிக்கு நான்கு முக்கியமான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி, இலங்கை அரசு குறித்த நான்கு விடயங்களில், பயனுள்ள, காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் நிதி ஒதுக்கீட்டுக் குழுக்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்தால் மட்டுமே, இந்த சட்டத்தின் கீழான நிதியுதவி இலங்கை அரசுக்கு கிடைக்கும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

⦁ மனித உரிமை மீறல்களை விசாரிப்பதன் மூலமும், அத்தகைய மீறல்களின் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதன் மூலமும், இனம் மற்றும் மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், இலங்கை மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மதிக்கப்பட்டு பேணப்படுதல்.

⦁ நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் திறனை அதிகரித்தல்.

⦁ சீன மக்கள் குடியரசின் செல்வாக்கிற்கு எதிராக, அதன் இறையாண்மையை வலியுறுத்துதல்

⦁ இலங்கையில் கடந்தகால மோதல்களிலிருந்து மீண்டெழும் இன மற்றும் மத குழுக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்.

இதன் கீழ்,

1. காணி சுவீகரிப்பு மற்றும் உரிமையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது

2. காணாமல் போனவர்களின் அலுவலகத்தின் செயற்பாட்டைப் பராமரிப்பது உட்பட, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது

3. முன்னர் போர் நடந்த பகுதிகளில் ஆயுதப்படைகளின் இருப்பைக் குறைத்தல் மற்றும் மோதல்களுக்கு பிந்தைய நல்லிணக்கம் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அமைதி நேரப் பாத்திரத்திற்காக ஆயுதப்படைகளை மறுசீரமைத்தல்;

4. பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல் தொடர்பான சட்டங்களை, சர்வதேச தரங்களுக்கு இணங்க ரத்து செய்தல் அல்லது திருத்துதல்

5. தன்னிச்சையான கைது மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டுகளை விசாரித்தல் மற்றும் நம்பகமான நீதி பொறிமுறையை ஆதரித்தல் ஆகிய விடயங்கள் துணை நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே இலங்கைக்கான நிதியுதவிகளுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலரினால் பரிந்துரை செய்ய முடியும். எனினும், இந்த நிபந்தனைகள் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணத்திற்காக கிடைக்கக் கூடிய நிதிகளுக்கு பொருந்தாது என்றும் அமெரிக்க சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அதன்படி, விதிவிலக்காக கூறப்பட்டுள்ள உதவிகளில், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அடையாளம் காண்பது மற்றும் சித்திரவதை மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்: நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தல், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் இறையாண்மையை ஊக்குவித்தல், சர்வதேச இராணுவ கல்வி மற்றும் பயிற்சி ஆகியன இடம்பெற்றிருக்கின்றன.

அதேவேளை, சர்வதேச பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழேயும், இலங்கை இரண்டு வழிகளில் 15.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவியைப் பெற முடியும் என்றும், அமெரிக்க சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டத்தின் மூலம் இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் மற்றும் ‘‘வெளிநாட்டு இராணுவ நிதி திட்டத்தின் கீழ், கடலோரக் காவல்படைக் கப்பலைப் புதுப்பிப்பதற்கு இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கக் கூடும்: இது முதலாவது.

இதற்கு மேலதிகமாக மனிதாபிமான உதவி, பேரழிவு நிவாரணம், மனித உரிமைகள் மற்றும் தொடர்புடைய பாடத்திட்ட மேம்பாடு, மற்றும் கடல்சார் பாதுகாப்பு விழிப்புணர்வு, கடற்படைக்கான தொழில்முறை மற்றும் கடலோர காவற்படைக்கான பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு மேலும் 5 இலட்சம் டொலர்கள் வரை கிடைக்கக் கூடும் என்றும் அமெரிக்கச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மிலேனியம் சவால் நிறுவனம் மூலமாக, அமெரிக்கா வழங்க முன்வந்த 480 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதில் ஏற்பட்ட இழுபறிகளால், எம்.சி.சி. தனது கொடைத் திட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்து ஒரு வாரத்திலேயே, இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் அதற்கான நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது அமெரிக்கா.

எம்.சி.சி. கொடை விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், அதுபோன்ற நாட்டின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய உடன்பாடுகள், உதவிகள் எந்த விதத்தில் வந்தாலும் அதனை நிராகரிப்போம் என்று அரசாங்கம் கூறியிருந்தது.

இவ்வாறான நிலையில், அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான்.

அமெரிக்கா முன்வைத்துள்ள மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் சார்ந்த நிபந்தனைகள் பல, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துடன் தொடர்புடையவை.

மீறல்களுக்கான விசாரணைகள், பொறுப்புக்கூறல், படைகள் விலக்கம், காணிகள் சுவீகரிப்பு, இராணுவ மறுசீரமைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்திருக்கிறது. இவ்வாறான நிபந்தனைகளை 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கா முன்வைக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தான், இந்த நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்திருக்கிறது.

இதற்கு அப்பால், இன்னொரு முக்கியமான நிபந்தனையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இலங்கை அரசு உறுதியான நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ள சூழலில் தான், அமெரிக்கா இந்த நிபந்தனையை முன்வைத்திருக்கிறது. கொழும்புக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ, சீனாவை ‘வேட்டையாடும் ஓநாய்’ என்று குறிப்பிட்டிருந்ததுடன், அதனிடம் இருந்து விலகி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு இணங்க மறுத்து விட்டது. இவ்வாறான நிலையில் தான், சீனாவிடம் இருந்து இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு, ஒரு நிபந்தனையை அமெரிக்கா விதித்திருக்கிறது.

இதன் மூலம், இலங்கையின் இறையாண்மையின் மீது சீனா தலையிடுகிறது என்ற வெளிப்படையான குற்றச்சாட்டையும் அமெரிக்கா முன்வைத்திருக்கிறது.

எவ்வாறாயினும், இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக்கு பயிற்சி அளித்தல் மற்றும் மனிதாபிமான உதவிகள் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்து நெகிழ்வுப் போக்கைத் தான் கடைப்பிடித்து வருகிறது.

ஆயினும், இலங்கைக்கு கடலோரக் காவல்படையின் இரண்டு கப்பல்களை கொடையாக வழங்கியிருந்த அமெரிக்கா, அதில் ஒன்றைப் புதுப்பிப்பதற்கு, 15 மில்லியன் டொலர்கள் உதவியை வழங்க முன்வந்திருக்கிறது,

ஆனாலும் இந்த உதவியைப் பெறுவதற்கு, அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்.

அவ்வாறு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை இணங்குமா என்பது தான் சிக்கல்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *