இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏறக்குறைய 2 மில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை நிறுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் 27 வீத பேஸ்புக் கணக்குகள் போலியானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
நீதியமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து போலிச் செய்திகள், போலி சமூக ஊடக கணக்குகளை அகற்ற புதிய சட்டங்களை வகுப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள் ளது என அமைச்சர் ரம்புக்வெல கூறினார்.
அமைச்சரவை அனுமதியைத் தொடர்ந்து போலி சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் என்பதுடன் இது நாட்டில் போலிச் செய்திகள் வெளியாவதைக் குறைக்கும் முயற்சியாகும் எனவும் அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதம், தீவிரவாதம், கொள்ளை மற்றும் கொலைகள் தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்க சில கணக்குகள் பயன்படுத்தப்படுவது அறியப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.