4 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு;  சசிகலா இன்று விடுதலை!

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு; சசிகலா இன்று விடுதலை!

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு வைத்தியசாலையிலிருந்தவாறே  சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டன.இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாகப் பேசுகிறார்.

கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.

இதற்கு கர்நாடக பொலிஸ் துறை அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்திக்கிறார்கள்.

அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெறுகிறார்கள். அதையடுத்து உணவு இடைவேளைக்குப் பிறகு, சசிகலாவை முறைப்படி சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு அவருக்கு சிறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் பொலிஸ் பாதுகாப்பு இரத்து செய்யப்படும். பிறகு அவரை குடும்பத்தினர் தங்களின் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள்.மேலும்  சசிகலாவுக்கு தொடர்ந்து விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவுள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது உடல்நிலை நன்றாகத் தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *