4 மீனவர்கள் உடலும், பாக்குநீரிணையில் மிதந்ததா ?

4 மீனவர்கள் உடலும், பாக்குநீரிணையில் மிதந்ததா ?

தமிழக மீனவர்கள் 4 பேரை ஸ்ரீலங்கா கடற்படையினர் நடுக்கடலில் கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், ஸ்ரீலங்கா கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்றது தொடர்பாக கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என ‘இந்து’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம், இந்திய மத்திய அரசாங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது எனவும் மாநிலங்களவையில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில் ”கடந்த மாதம் 19ம் திகதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போனார்கள். அடுத்த 4 நாட்களுக்குப்பின் ஸ்ரீலங்கா கடற்படையினர், அந்த 4 மீனவர்கள் உடலும், பாக்குநீரிணை கடற்பகுதியில் பகுதியில் மிதப்பதாகத் தெரிவித்தார்கள்.

தமிழக மீனவர்களின் படகு, தங்கள் கடற்படை ரோந்து கப்பலில் மோதியதாகத் தெரிவித்தார்கள். ஆனால், தமிழக மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஸ்ரீலங்கா கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஸ்ரீலங்கா கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவித்தார்

அதிமுக எம்.பி. தம்பித்துரையும், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில் “இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 245 மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் கொன்றுள்ளனர்.

இதற்கு முன் தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்யும், அவர்களை இந்திய அரசு மீட்டு வரும். ஆனால், தமிழக மீனவர்களை கொல்வது என்பது கண்டனத்துக்குரியது.

இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்த கொலைச் சம்பவங்களை பிரதமர் மோடி கண்டிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசுகையில் “தமிழக மீனவர்கள், ஸ்ரீலங்கா கடற்படை விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுவரை தீர்வுகாண முடியவில்லை. அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களால் முடிந்த அளவு பணிகளைச் செய்துள்ளன. ஆனால், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம். இதை வெளிவிவகார அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எழுந்து பேசுகையில் “தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல், இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக, மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *