தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.இந்நிலையில் அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலாங் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானது. கடலுக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த நிலநடுக்கம் மலாங் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஜாவாவின் லுமாஜாங், மலாங் மாவட்டங்களில் 8 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனா். இரு மாவட்டங்களிலும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தனகடலுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. எனினும் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.