பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,953 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 96 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மொத்த கொரோனா உயிரிழப்பு 14 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.கடந்த 3-ந் தேதி வரை அங்கு 9 லட்சத்து 36 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான மந்திரி ஆசாத் உமர் கூறுகையில், “கோடைகாலத்தின் தொடக்கத்தையும், தடுப்பூசி மையங்களை அடைவதற்கும் வரிசையில் காத்திருப்பதற்கும் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தையும் மனதில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.