முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 15 மேலதிக வாக்குகளினால் கரைதுறைப்பற்று பிரதேச சபையனுடைய புதிய தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்து வந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன் படிக்கைக்கு அமைய தமிழீழ விடுதலை இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்கும் நோக்கோடு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு இன்று காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் 22 உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. 22 உறுப்பினர்களில் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் என மூன்று பேர் நடுநிலை வகித்த நிலையில் 19 பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒருவருமாக 4 பேர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அன்ரனி ரங்கதுசாரவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் ஏனைய கட்சிகளைச் சார்ந்த 15 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கமலநாதன் விஜிந்தனிற்கு வாக்களித்தனர்.இதற்கமைய 15 வாக்குகளைப்பெற்று கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய புதிய தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.